குடியுரிமை திருத்த சட்டம் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லியின் ஷாஹின் பாக் பகுதியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியது ஆம் ஆத்மீ கட்சியை சேர்ந்தவர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கடந்த 50 நாட்களாக டெல்லியின் ஷாஹின் பாக் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒன்றாம் தேதி இந்த போராட்டத்தில் நுழைந்த கபில் குஜ்ஜார் என்ற இளைஞர் துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கபில் குஜ்ஜாரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதில் கபில் குஜ்ஜார் மற்றும் அவரது தந்தை ஆகிய இருவரும் ஆம் ஆத்மீ கட்சியை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. கபில் குஜ்ஜார் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆம் ஆத்மீ கட்சியில் சேர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால், கபில் குஜ்ஜாருக்கும், ஆம் ஆத்மீ கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.