Skip to main content

உயிரிழந்த அதிகாரிகளின் உடல்களை அடையாளம் காண்பதில் சிரமம் - இந்திய இராணுவம்!

Published on 09/12/2021 | Edited on 09/12/2021

 

indian army

 

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் நேற்று 08/12/2021 பிற்பகல் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத், 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இந்திய விமானப் படை சார்பில் அறிவிக்கப்பட்டது.

 

இதனைத்தொடர்ந்து வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் வைக்கப்பட்ட பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் 13 பேரின் உடல்களும் சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கிருந்து அந்த உடல்கள் விமானம் மூலமாக டெல்லிக்கு செல்கிறது.

 

அங்கு 13 பேரின் உடல்களுக்கும் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் ஹெலிகாப்டர் விபத்தின் தீவிரத்தால் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.

 

இதுதொடர்பாக இந்திய இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; விமான விபத்தின் தீவிரம் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பதில் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. (உயிரிழந்தவர்களின்) அன்புக்குரியவர்களின் உணர்ச்சிகளை கருத்தில் கொண்டு உடல்களை அடையாளம் காண அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

உயிரிழந்த அனைத்து அதிகாரிகளின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும் டெல்லிக்கு வந்துள்ளனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் ஆதரவும் வழங்கப்பட்டு வருகிறது. உடல்களை அடையாளம் காண அறிவியல் ரீதியான நடவடிக்கைகளுடன், நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் உதவியும் பெறப்படும். உடல்கள் அடையாளம் காணப்பட்ட பின்னரே அவை உறவினருக்கு வழங்கப்படும். அடையாளம் காணும் செயல்முறை முடிந்ததும், குடும்பத்தினருடன் ஆலோசித்து அதிகாரிகளுக்கு உரிய இராணுவ சடங்குகள் முடிவு செய்யப்படும். இவ்வாறு இந்திய இராணுவம் கூறியுள்ளது.

 

பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட நான்கு பேரின் உடல் மட்டுமே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் கூறியுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘முன்னாள் ராணுவ வீரர்கள் கவனத்திற்கு’ - தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
 Tamil Nadu Govt announced Ex-Servicemen Tax Concession

கடந்த பிப்ரவரி மாதம், தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் வெளியிட்ட நிதிநிலை அறிக்கையில், ‘கைம்பெண்கள், போரில் ஊனமுற்ற வீரர்கள் உள்ளிட்ட சிலருக்கு மட்டும் அளிக்கப்பட்டு வரும் சொத்து வரி மற்றும் வீட்டு வரி இவற்றின் வரிச்சலுகையானது தற்போது, அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் வழங்கப்படும் வகையில் ஆணை பிறப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு அரசு இன்று (13-03-24) அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, ‘நடப்பு நிதியாண்டில் இருந்து அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இந்த விலக்குகளை பெற இந்த ஐந்து நிபந்தனைக்குள் இடம்பெற வேண்டும். முன்னாள், ராணுவ வீரர்கள் நிரந்தரமாக தமிழகத்தில் குடியிருப்பவராக வேண்டும். முன்னாள் ராணுவ வீரர்கள் குடியிருக்கும் கட்டடத்துக்கு மட்டும் இச்சலுகை வழங்கப்படும்.

அவர்கள் வருமான வரி செலுத்துபவராக இருக்கக் கூடாது. ராணுவ வீரர்கள், தங்களுடைய பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு மறுவேலைவாய்ப்பு திட்டத்தில் மத்திய அல்லது மாநில அரசின் பணியில் வேலை செய்பவராக இருக்கக்கூடாது. மறுவேலைவாய்ப்பில் ஓய்வுபெற்று ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இச்சலுகை பொருந்தாது.  இந்த திட்டத்தின் மூலம், 1.20 லட்சத்துக்கும் அதிகமான முன்னாள் ராணுவ வீரர்கள் பயன்பெறுவார்கள்’ என்று தெரிவித்துள்ளது.

Next Story

மொபைல் முழுக்க ஆபாசப் படம்; ராணுவ வீரர் கைது

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
Soldier arrested in thiruchy

திருச்சியில் பெண்களை ஆபாசமாகப் படம் பிடித்து செல்போனில் வைத்திருந்ததாக ராணுவ வீரர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி லால்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஜெய பாலாஜி. இவர் குஜராத் மாநிலம் மீரட் நகரில் ராணுவ வீரராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு ஜெய பாலாஜி வந்திருந்த நிலையில், பெண்கள் சிலரை ஆபாசமாகப் படம் எடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து போலீசாருக்கு சிலர் புகார் அளித்திருந்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் ராணுவ வீரர் ஜெய பாலாஜியை பிடித்த போலீசார் அவருடைய செல்போனை வாங்கிப் பார்த்தனர். அதில் பல பெண்களின் ஆபாசப் படங்கள் இருந்தது போலீஸாருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ராணுவ வீரர் ஜெய பாலாஜியின் மனைவி சென்னையில் காவல்துறையில் பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது.