எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருக்கும் குற்ற வழக்குகளின் விவரங்களை நான்கு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிரிமினல் குற்ற வழக்கில் அரசியல்வாதிகள் தண்டிக்கப்படுகிறபோது, தண்டனை முடிந்து ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டால், அவர்கள் எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சராகக் கூட பதவி வகிக்க முடியும் என்ற சட்ட அம்சத்தை மாற்றி இவர்கள் தேர்தலில் நிற்க வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீது ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருக்கும் குற்ற வழக்குகளின் விவரங்களை நான்கு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய அனைத்து உயர்நீதிமன்றங்களுக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்தும், அது சார்ந்த அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்னதாக மூன்று முறை விளம்பரப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு நெறிமுறைகளை கடந்த முறை விசாரணையின் போது உச்சநீதிமன்றம் வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.