இந்தியாவில் கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகின்றன. ரஷ்யாவிலிருந்து ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், கோவிஷீல்ட் தடுப்பூசியைத் தயாரிக்கும் சீரம் நிறுவனம், ஸ்புட்னிக் V தடுப்பூசியைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியது.
இந்நிலையில் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம், ஸ்புட்னிக் v தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரிக்கும் வகையில், தடுப்பூசி தயாரிப்புக்கான தொழிற்நுட்ப பரிமாற்றம் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகத் தெரிவித்துள்ளது. சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதார் பூனவல்லாவும், செப்டம்பர் மாதத்தில் சோதனை தடுப்பூசிகள் உற்பத்தி தொடங்கிவிடும் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே மாடர்னா தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதில் புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்தியத் தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அண்மையில் சிப்லா நிறுவனத்துக்கு மாடர்னா தடுப்பூசியை இறக்குமதி செய்ய அனுமதியளித்தார். மாடர்னா தடுப்பூசிக்கும் அவசரக் கால அங்கீகாரம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் மாடர்னா நிறுவனத்துக்குச் சட்ட பாதுகாப்பு வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.
இதுதொடர்பாக மத்திய அரசின் நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே. பால், "சட்ட பாதுகாப்பு வழங்குவது தொடர்பாகப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. ஆனால் அவர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. நாங்கள் ஒப்பந்தத்தை இறுதி செய்ய முயற்சிக்கிறோம். ஆனால் இது பேச்சுவார்த்தை என்பதால் முன்னும் பின்னுமாக இருக்கிறது" எனக் கூறியுள்ளார்.