புதுச்சேரி அரசு மருத்துவமனையில் இருக்கக்கூடிய செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி அரசு மருத்துவமனை மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களிலும் செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் அவர்கள், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசு ஆணையின்படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பணி கட்டமைப்பு மாற்றி அமைக்க வேண்டும். கொரோனா காலத்தில் பணி அமர்த்தப்பட்ட தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திவருகின்றனர்.
மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பரவிவரும் நிலையில், நேற்று ஒரே நாளில் இருவர் டெங்குவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், செவிலியர்களின் திடீர் போராட்டம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.