Skip to main content

“பா.ஜ.க எம்.பி பிரிஜ் பூஷண் சிங் எனது குடும்பத்தை குறி வைக்கிறார்” - சாக்‌ஷி மாலிக் பரபரப்பு புகார்

Published on 03/01/2024 | Edited on 03/01/2024
Sakshi Malik sensational complaint on Brij bhushan Singh is targeting my family

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்திருந்த நிலையில், அண்மையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டங்களில் முக்கியப் பங்கு வகித்தவர் ஒலிம்பிக் மல்யுத்த பதக்க வீரரான சாக்‌ஷி மாலிக். பல்வேறு சர்ச்சைகள், விமர்சனங்கள், போராட்டத்திற்குப் பிறகு பிரிஜ் பூஷண் தலைமைப் பதவியிலிருந்து விலகிவிட்ட நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்குத் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் பிரிஜ் பூஷணின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான சஞ்சய் சிங் என்பவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மொத்தமுள்ள 15 பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் சஞ்சய் சிங் அணியினர் 13 பேர் வெற்றி பெற்றனர். இது மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் உள்ளிட்டோருக்கு பெரும் கவலையை ஏற்படுத்திய நிலையில், மல்யுத்த விளையாட்டிலிருந்து தான் விலகுவதாக சாக்‌ஷி மாலிக் அதிரடியாக அறிவித்திருந்தார்.

கடந்த கடந்த டிசம்பர் மாதம் 26ஆம் தேதி இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்குத் தலைவராக சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், மத்திய அரசு சார்பில் தனக்கு அளிக்கப்பட்ட அர்ஜுனா விருது மற்றும் கேல் ரத்னா விருதை திரும்ப ஒப்படைப்பதாக அறிவித்திருந்தார். அதன்படி வினேஷ் போகத், தமது கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகளைத் தலைநகரின் கர்தவ்ய பாத் முக்கிய சாலையின் நடுவில் விட்டுச் சென்றார். 

இதற்கிடையே, இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க தற்காலிக குழுவை அமைத்து இந்திய ஒலிம்பிக் சங்கம் உத்தரவிட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக பூபேந்தர் சிங் பஜ்வா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த கூட்டமைப்பின் உறுப்பினர்களாக எம்.எம். சோமயா, மஞ்சுஷா கன்வர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவினர், வீரர் - வீராங்கனைகள் தேர்வு, வங்கிக் கணக்குகளை கையாளுதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்வர் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சாக்‌ஷி மாலிக், “எங்களுக்கு சஞ்சய் சிங் மட்டும் தான் பிரச்சனை. அவரைத் தவிர புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுடன் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. மல்யுத்த சம்மேளனத்தின் செயல்பாடுகளில் சஞ்சய் சிங் தலையிடாதவாறு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் உறுதி செய்ய வேண்டும். பா.ஜ.க. எம்.பியும், மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷண் சிங் எனது குடும்பத்தை குறிவைக்கிறார். அவரால் எனது குடும்பத்துக்கு ஆபத்து ஏற்படலாம். எங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்” என்று கூறினார். 
 

சார்ந்த செய்திகள்