உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலில், பாஜக, நிஷாத் கட்சி மற்றும் அப்னா தளம் (எஸ்) ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்தநிலையில் அப்னா தளம் (எஸ்), உத்தரப்பிரதேச மாநிலத்தின் சுவார் தொகுதியின் வேட்பாளராக ஹைதர் அலி கான் என்பவரை அறிவித்துள்ளது.
2014 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு, உத்தரப்பிரதேசத்தில் பாஜக கூட்டணி அறிவித்துள்ள முதல் இஸ்லாமிய வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 2017 சட்டமன்ற தேர்தலிலும், 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவும், அதன் கூட்டணி கட்சிகளும் இஸ்லாமிய வேட்பாளரை களமிறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதர் அலி கான், ராம்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தாத்தா சுல்பிகர் அலி கான், ராம்பூர் தொகுதியில் ஐந்து முறை காங்கிரஸ் எம்.பி.யாக இருந்துள்ளார். ஹைதர் அலி கானின் தந்தை நவாப் காசிம் அலி கான், நான்கு முறை எம்.எல்.ஏ.வாக தேர்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் தற்போது அவர் ராம்பூர் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஹைதர் அலி கான், சுவார் தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் கட்சியால் அறிவிக்கப்பட்டார். பின்னர் சில நாட்களுக்கு முன்னர் டெல்லி சென்று அப்னா தளம் (எஸ்) கட்சியின் தலைவர் அனுப்ரியா படேலை சந்தித்தார். இந்தநிலையில் அவர், அப்னா தளம் (எஸ்) கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.