2016 ஆம் ஆண்டு திடீரென்று ஒருநாள் 1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்து நாடு முழுவதும் மிகப்பெரிய பதற்றத்தை உருவாக்கினார் மோடி.
இந்திய ரூபாய் நோட்டுகளை பாகிஸ்தான் அப்படியே அச்சடித்து தீவிரவாதிகளுக்கு பயன்படுத்துகிறது. கருப்புப்பணம் ஏராளமாக புழங்குகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலமாக பயங்கரவாதத்தையும் கருப்புப்பணத்தையும் 100 நாட்களில் ஒழிப்பேன் என்று மோடி கூறினார்.
ஆனால், இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கானோர் ஏடிஎம் மற்றும் வங்கி வாசல்களில் நீண்ட கியூவில் நின்று மாரடைப்பால் இறந்ததுதான் மிச்சம். அன்றைக்கு 9 சதவீதமாக இருந்த இந்திய பொருளாதார வளர்ச்சி இப்போது 6 சதவீதமாக வீழ்ந்துகொண்டிருக்கிறது.
![rupees](http://image.nakkheeran.in/cdn/farfuture/MjUtvurYvdJCa-8wR4WIhkRtoA0UBZ8CzWH_LO8Qqzw/1571124704/sites/default/files/inline-images/rupees_6.jpg)
உலக வங்கியே கவலை தெரிவித்துள்ள நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதை திடீரென்று அரசு நிறுத்தியிருக்கிறது. ரிசர்வ் வங்கியின் கையிருப்பு முழுவதையும் துடைத்து எடுத்து பெருமுதலாளிகளுக்கு சலுகை அளிக்க பயன்படுத்திய மோடி அரசு, அடுத்து என்ன செய்யப்போகிறது என்று பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில்தான், புதிய 2000, 500 ரூபாய் நோட்டுகளை உயர்தரத்துடன் அச்சடித்து மீண்டும் பாகிஸ்தான் புழக்கத்தில் விட்டிருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு வெடிகுண்டைத் தூக்கிப் போட்டுள்ளது.
இதையடுத்து, மீண்டும் ஒரு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு மோடி அரசு அடிப்போடுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திங்கள்கிழமை பயங்கரவாத எதிர்ப்பு குழுக்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய புலனாய்வு அமைப்பின் ஐஜி அலோக் மிட்டல் பங்கேற்றார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் கலந்துகொண்டார். இதில் பேசிய மிட்டல், இந்திய ரூபாய் நோட்டுகளை பாகிஸ்தான் உயர்தரத்துடன் அச்சடித்து வினியோகிக்கிறது என்ற தகவலை கூறினார்.
இந்த போலி பணப்புழக்கத்தால் காலிஸ்தான் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இத்தகைய பணப்புழக்கம் தொடர்பாக 48 வழக்குகள் பதிவானதாகவும், 13 வழக்குகளில் தண்டனை தரப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். புதிய நோட்டுகள் வெளியிடப்பட்ட பிறகு கடந்த 3 ஆண்டுகளில் 50 கோடி ரூபாய் பிடிபட்டிருப்பதாக நாடாளுமன்றத்திலேயே கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய நோட்டுகளை கள்ள நோட்டுக்களாக அச்சடிக்க முடியாது என்றும் அதில் சிப் வைக்கப்பட்டிருப்பதாகவும், பயங்கரவாதிகளை காட்டிக் கொடுத்துவிடும் என்றும் பாஜக தலைவர்கள் 2016ல் பிரச்சாரம் செய்தனர். ஆனால், மீண்டும் பயங்கரவாதத்தை காரணம் காட்டி பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு அரசு தயாராகிறதோ என்ற அச்சம் பரவியுள்ளது.