இந்தியாவில் கரோனா பரவல் மோசமடைந்து வருகிறது. நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் இந்தியாவிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மஹாராஷ்ட்ரா இருந்து வருகிறது. அங்கு கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நடவடிக்கைகளில் முகேஷ் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நிதா அம்பானியின் தலைமையிலான ரிலையன்ஸ் பவுண்டேஷன், பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அந்தவகையில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கு மேலும் சில உதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.இதுகுறித்து ரிலையன்ஸ் பவுண்டேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்பையில் 650 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையத்தை அமைக்கப்படவுள்ள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் ரிலையன்ஸ் பவுண்டேஷன், 500 முன்களப்பணியாளர்கள் 24 மணிநேரமும் பணியாற்றும் வகையில் நியமிக்கப்படவுள்ளனர். தேசிய விளையாட்டு மையத்திலும், செவன் ஹில்ஸ் மருத்துவமனையிலும் உள்ள 775 படுக்கைகள் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். மேலும் அங்குள்ள நோயாளிகளுக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும். இதற்கான மொத்த செலவையும் ரிலையன்ஸ் பவுண்டேஷனே ஏற்கும் என கூறியுள்ளது.
ரிலையன்ஸ் பவுண்டேஷன், மஹாராஷ்ட்ரா அரசோடு இணைந்து இந்த பணிகளை செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ரிலையன்ஸ் பவுண்டேஷனின் நிறுவன தலைவர் நிதா அம்பானி, "ரிலையன்ஸ் பவுண்டேஷன், தேசத்திற்கு சேவை செய்வதில் எப்போதும் முன்நிற்கும். மேலும் பெருந்தொற்றிற்கு எதிரான இந்தியாவின் இடைவிடாத போராட்டத்திற்கு உறுதுணையாக இருப்பது நமது கடமை" என தெரிவித்துள்ளார். மேலும் அவர், " சார் எச்.என் ரிலையன்ஸ் பவுண்டேஷன் மருத்துவமனை, மும்பை முழுவதும் 875 படுக்கைகளை நிர்வாகித்து வருவதாக தெரிவித்துள்ளார்" என கூறியுள்ளார்.