
கர்நாடகா மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மூடா நில மோசடி வழக்கு தொடர்பான குற்றச்சாட்டு, அமைச்சரவையில் உருவாகும் சலசலப்பு என பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் முதல்வர் சித்தராமையா, கடந்த 8ஆம் தேதி முழங்கால் வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதற்கிடையில், இன்வெஸ்ட் கர்நாடகா 2025 என்ற உச்சி மாநாடு கர்நாடகாவில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைக்கப்பட்டார். அதன்படி, அவரும் இந்த விழாவில் கலந்துகொண்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு, பொதுவெளியில் நடைபெற்ற இந்த உச்சி மாநாட்டில் சித்தராமையா கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வின் தொடக்க அமர்வில் உரையாற்றிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், “சனிக்கிழமை பெங்களூரு வந்தபோது, முதல்வர் சித்தராமையாவின் காயம் குறித்து அறிந்தேன். அவரை இங்கு பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, அவர் விரைவாக குணமடைந்து வருவதை இது குறிக்கிறது” என்று கூறினார். மேலும், “அரசியலில், உங்கள் கால்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், ஏனென்றால் எல்லா இடங்களிலும் தடைகள் இருக்கும்” என்று நகைச்சுவையாகக் கூறினார்.
அதன் பிறகு ராஜ்நாத் சிங் பேசியதாவது, “முதல்வர் தனது பணிக்காலத்தில் பல்வேறு சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு வருகிறார். நாங்கள் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், அரசியல் எதிரிகள். அவரது பெருந்தன்மையான செயல் அவரது அரசியல் திறமையை தெளிவாகக் காட்டுகிறது. சகோதர உறவுகளின் உணர்வில் ஒன்றாகச் செயல்படுவதற்கான வரம்புகளுக்கு அப்பாற்பட்ட பரிசீலனைகளை இது எழுப்புகிறது. இந்த நிகழ்வுக்கு என்னை அழைத்தது சித்தராமையாவின் ராஜதந்திரம். இந்தியா இனி முதலீட்டாளர்களுக்கு சிவப்பு நாடாவை வழங்குவதில்லை, அதற்குப் பதிலாக நாங்கள் அவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கிறோம்” என்று கூறினார்.