அத்துமீறல் முயற்சிகளைச் சீனா கைவிடாவிட்டால் இந்தியா கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தயங்காது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் மாநிலங்களவைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், "கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து கிழக்கு லடாக் இந்திய எல்லைப் பகுதிகளில் சீன ராணுவப் படைகள் ஊடுருவல் முயற்சிகளைத் துவங்கின. நமது இருதரப்பு நாடுகளின் ஒப்பந்தங்கள் மற்றும் விதிகளின்படி, தளபதிகள் அளவில் இந்தச் சூழல் பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டபோது, கடந்த மே மாத மத்தியில், மேற்குப் பிரிவில் அமைந்த எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் சீனப் படைகள் பல முறை அத்துமீறி ஊடுருவும் முயற்சியில் ஈடுபட்டன. எனினும் சீனாவின் இந்த முயற்சிகளைத் தொடக்கத்திலேயே கண்டறிந்து, நமது படைகள் அதற்குச் சரியான முறையில் பதிலடி அளித்தனர்.
நமது நாட்டை யாரையும் ஆக்கிரமிக்க விடமாட்டோம். எல்லையில் அத்துமீறல் முயற்சிகளைச் சீனா கைவிடாவிட்டால் இந்தியா கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தயங்காது. சீனாவால் படைகள் குவிக்கப்பட்டிருப்பது 1993 மற்றும் 1996 ஒப்பந்தங்களுக்கு எதிரானது. நமது ஆயுதப் படைகள் ஒப்பந்தத்தைக் கடுமையாக கடைப்பிடிக்கும் அதே நேரம், சீனத் தரப்புகள் முறையாகக் கடைப்பிடிக்கவில்லை. தற்போதைய சூழ்நிலையில், என்னால் விவரிக்க முடியாத முக்கியமான செயல்பாட்டுச் சிக்கல்கள் உள்ளன. இந்த விஷயத்தின் நிலையை அவையினர் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.