ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முதல்வராக அசோக் கெலாட் பதவியேற்றதில் இருந்தே அசோக் கெலாட்டுக்கும் முன்னாள் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே உட்கட்சி மற்றும் ஆட்சி தொடர்பாக மோதல் இருந்து வருகிறது.
இந்நிலையில் அசோக் கெலாட் தலைமையிலான அரசுக்கு எதிராக கடந்த 2020 ஆண்டு ஜூலை மாதம் அப்போது துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் மற்றும் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 18 பேர் போர்க்கொடி தூக்கினர். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி மேலிடத்தின் தலையீட்டையடுத்து துணை முதல்வர் மற்றும் அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிகளில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார். இருப்பினும், வசுந்தரா ராஜே தலைமையிலான முந்தைய பாஜக அரசின் ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சச்சின் பைலட் வலியுறுத்தி வருகிறார். இதனால் இருவருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சி செய்த வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான பாஜக ஆட்சியின் போது நடைபெற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஆளும் காங்கிரஸ் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக சச்சின் பைலட் அறிவித்து இருந்தார். ஆனால், இதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைமை கடும் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இருப்பினும், கட்சித் தலைமையின் எதிர்ப்பையும் மீறி சச்சின் பைலட் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஜெய்ப்பூர் நகரில் கடந்த மாதம் 11 ஆம் தேதி நடத்தினார்.
இந்நிலையில், தற்போது ராஜஸ்தான் மாநிலம் டோல்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அசோக் கெலாட், ‘‘மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் தர்மேந்திர பிரதான் ஆகியோர் என்னுடைய ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்தனர். இதற்காக காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுத்ததாகச் சொல்லப்பட்டது. 10 கோடியோ, 20 கோடியோ எதுவாக இருந்தாலும் அந்தப் பணத்தை அவர்கள் திருப்பிக் கொடுக்க வேண்டும். அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்காவிட்டால் அமித்ஷாவிடம் இருந்து தொடர்ந்து அழுத்தம் வந்து கொண்டே தான் இருக்கும். உள்துறை அமைச்சரான அமித்ஷா மகாராஷ்டிராவில் சிவசேனாவை உடைத்தார். ஆனால், அன்றைக்கு என்னுடைய ஆட்சி கவிழாமல் காப்பாற்றியது ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, முன்னாள் சட்டப்பேரவை தலைவர் கைலாஷ் மேக்வால் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சோபா ராணி குஷ்வாஹா ஆகியோர் தான்.
இதற்கு முன்பு கடந்த காலத்தில் பாஜக முதல்வராக பைரோன் சிங் செகாவத் இருந்த போது அவரது ஆட்சியை கவிழ்க்க நடந்த முயற்சியை காங்கிரஸ் தலைவராக இருந்த நான் ஆதரிக்கவில்லை. அதே போன்று தற்போது என்னுடைய ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியை வசுந்தரா ராஜே சிந்தியா, கைலாஷ் மேக்வால் ஆகியோரும் விரும்பவில்லை’’ என்று பேசினார்.
முதல்வர் அசோக் கெலாட்டின் இந்த பேச்சானது ராஜஸ்தான் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, "எனக்கு எதிராக அசோக் கெலாட் கூறிய கருத்து ஒரு சதி. கெலாட் அளவுக்கு யாரும் என்னை அவமானப்படுத்த முடியாது. வரும் 2023 சட்டமன்றத் தேர்தலில் தோற்றுவிடுவோமோ என்ற பயத்தில் இவ்வாறு பொய் சொல்கிறார். சொந்தக் கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி விவகாரத்தால் அவர் இப்படி பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.