
இந்தியா ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டிருக்கும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த 7-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து நடைபயணத்தை தொடங்கினார். குமரி மாவட்டத்தில் 4 நாட்கள் நடைபயணத்தை முடித்துவிட்டு 11-ம் தேதி கேரளா சென்ற ராகுல் காந்தி, தனது 12-ம் நாள் நடைபயணத்தை 19-ம் தேதி ஆலப்புழா மாவட்டத்தில் மேற்கொண்டார்.
அங்கு வாடக்கல் கடலோர கிராம மக்களை சந்தித்து அவா்களுடன் கலந்துரையாடினார். அப்போது மீனவா்களுக்கு அடிக்கடி ஏற்படும் பிரச்சனைகள், கடல் சீற்றங்களினால் மீனவா்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் போன்றவற்றை கேட்டறிந்தார். தொடா்ந்து புன்னமடகாயலில் வள்ளங்களி படகு போட்டியில் கலந்து கொண்டார்.
இரண்டு படகுகளில் வெவ்வேறு நபா்கள் போட்டியில் கலந்து கொண்டனா். இதில் சுண்டன் படகில் ராகுல் காந்தி பங்கேற்றார். போட்டி தொடங்கியதும் மற்ற வீரா்களை போன்று ராகுல் காந்தியும் துடுப்பு போட்டு வள்ளத்தை செலுத்தினார். அப்போது படகில் இருந்த வீரா்களும் கரையில் நின்ற மக்களும் உற்சாக குரல் எழுப்பினார்கள். கடைசியில் போட்டியின் தூரத்தை ராகுல் காந்தி பங்கேற்ற அணியின் படகு முதலில் சென்று வெற்றி பெற்றது. பின்னா் ராகுல் காந்தி அனைத்து வீரா்களுக்கும் கை கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தார்.