இந்த வருடத்திற்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்து தற்போது வரை முழுவதுமாக நடைபெறவில்லை. நாடாளுமன்ற இரு அவைகளிலும், எதிர்க்கட்சிகள் சார்பில், மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உடனே விவாதிக்க வேண்டும், மணிப்பூர் விவகாரம் குறித்துப் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இரு அவைகளிலும் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு அவைகள் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற இரு அவைகளும் கூடிய நிலையில் எதிர்க்கட்சிகள் இன்றும் மணிப்பூர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். அதனால் பாஜகவினரும் எதிர்க்கட்சியினரும் அமளியில் ஈடுபட்டனர். அதனால் மக்களவை நண்பகல் 12 மணி வரையும், மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எம்.பி பதவியை மீண்டும் பெற்றதையடுத்து ராகுல் காந்தி தற்போது நாடாளுமன்றம் வந்துள்ளார். காலையில் ஒத்திவைக்கப்பட்ட மக்களவை 12 மணிக்கு கூடிய நிலையில் மீண்டும் அமளி ஏற்பட்டதால் மக்களவையை மதியம் 2 மணிக்கு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.