மத்தியப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் குறித்த பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, காங்கிரஸ் அரசை கலைக்கும் நேரத்தில் பெட்ரோல் விலையை குறைத்து மக்களுக்கு நன்மை செய்யுங்கள் என பிரதமர் மோடிக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியா கட்சியிலிருந்து விலகினார். நேற்று காலை பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த ஜோதிராதித்ய சிந்தியா தனது ராஜினாமா கடிதத்தைச் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில் அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தது காங்கிரஸ் தலைமை. இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் 22 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதன் காரணமாக மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, "தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசை கலைப்பதில் நீங்கள் மும்முரமாக இருக்கும் அதே நேரம், உலகளாவிய எண்ணெய் விலையில் 35% சரிவை நீங்கள் கவனிக்க மறந்துவிட்டீர்கள். இந்த சூழலில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.60 க்குக் குறைப்பதன் மூலம் இந்தியர்களுக்கு தயவுசெய்து நன்மை செய்யுங்கள். இது நமது பொருளாதாரத்தை உயர்த்த உதவும்" என தெரிவித்துள்ளார்.