குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பயணிப்பதற்காக அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து பி 777 ரகத்தைச் சேர்ந்த 2 விமானங்கள் வாங்கப்பட்டன. அமெரிக்க அதிபரின் தனி விமானத்தில் உள்ளது போன்ற சிறப்பான பாதுகாப்பு மற்றும் சொகுசு வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட இந்த விமானங்கள், கடந்த வாரம் இந்தியா வந்தடைந்தன.
அலுவலகப் பணிகள், கூட்டங்கள் நடத்துவதற்கான அரங்குகள், படுக்கை அறை, சமையல் அறை, 2,000 பேர் சாப்பிடுவதற்குத் தேவையான உணவுப் பொருட்களை வைக்கும் கிடங்கு, செயற்கைக்கோள் தொலைப்பேசி, இணைய வசதி, மருத்துவ அறுவை சிகிச்சை அறை, மருத்துவக் குழுவினர் தங்கும் அறை, பாதுகாப்பு வீரர்கள் தங்கும் அறை, வி.ஐ.பி.க்கள் தங்கும் அறை உள்ளிட்ட சகல வசதிகளோடும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமானங்கள் 8,400 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நான் டிராக்டரில் சோஃபாவில் அமர்ந்ததாக விமர்சிப்பவர்கள் பிரதமரின் சொகுசு விமானத்தைக் கண்டுகொள்ளாதது ஏன்? என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மீண்டும் கருத்துத் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, "விமானம் வாங்குவதற்காக பிரதமர் மோடி ரூ.8,400 கோடி செலவு செய்துள்ளார். ஆனால், சியாச்சின், லடாக் எல்லையில் தேசத்தைப் பாதுகாக்கும் நமது ராணுவ வீரர்களுக்குத் தேவையான பொருட்களை விமானம் வாங்கப்பட்ட தொகையில் வாங்கியிருக்கலாம்.
குளிருக்கான 30 லட்சம் ஆடைகள், 60 லட்சம் ஜாக்கெட், கையுறை, 67 லட்சத்து 20 ஆயிரம் ஷூக்கள், 16 லட்சத்து 80 ஆயிரம் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை விமானம் வாங்கிய தொகையில் வீரர்களுக்காக வாங்கியிருக்கலாம். பிரதமர் மோடி தன்னுடைய தோற்றத்தைப் பற்றி மட்டுமே அக்கறை கொள்கிறார். ராணுவ வீரர்களைப் பற்றிய கவலை அவருக்கில்லை" எனத் தெரிவித்துள்ளார்.