
கன்னட சினிமா நட்சத்திரமான புனித் ராஜ்குமாருக்கு கடந்த 29 ஆம் தேதி காலை மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி காலமானார். இது புனித் ராஜ்குமாரின் ரசிகர்களை மட்டுமின்றி திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தநிலையில் புனித் ராஜ்குமாரின் விருப்பப்படி, அவரது மறைவிற்குப் பிறகு அவரது கண்கள் தானம் செய்யப்பட்டது தானம் செய்யப்பட்ட புனித் ராஜ்குமாரின் கண்களால் தற்போது நான்கு பேருக்குப் பார்வை கிடைத்துள்ளது.
புனித் ராஜ்குமார் கண்களின் கார்னியாக்களின் மேல் அடுக்குகள், சூப்பர்பிசியல் கார்னியா நோயால் பாதிக்கப்பட்டிருந்த இரண்டு நபர்களுக்குப் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் கார்னியாவின் ஆழமான அடுக்குகள் எண்டோடெலியல் அல்லது ஆழமான கார்னியல் அடுக்கு நோயால் பாதிக்கப்பட்டிருந்த இரண்டு பேருக்குப் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நான்கு பேருக்குப் பார்வை கிடைத்துள்ளது.