Controversial BJP candidate and Bow arrow towards the mosque in telangana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத்தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. இங்கு பெரு நகரமாக பார்க்கப்படும் ஹைதராபாத் மக்களவைத் தொகுதி, கடந்த 1984ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏஐஎம்ஐஎம் கட்சி வசம் உள்ளது. தனது தந்தைக்கு பிறகு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக இருக்கும் அசாதுதீன் ஒவைசி ஹைதராபாத் மக்களவை தொகுதியில் எம்.பியாக உள்ளார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில், உள்ளூர் பிரபலமான மாதவி லதா என்ற பெண் மருத்துவர் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நேற்று (17-04-24) நாடு முழுவதும் ராம நவமி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும், அதனையொட்டி ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அந்த வகையில், தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் தலைமையில் ராம நவமி ஷோபா யாத்திரை, காவல்துறையின் தடையை மீறி நடத்தப்பட்டது. அந்த விழாவில் ஹைதராபாத் பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா பங்கேற்றார். அது தொடர்பாக ஊர்வலம் ஒன்றில் மாதவி லதா வலம் வந்த போது, அவரது செயல் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

Advertisment

இது தொடர்பான வீடியோவில், மாதவி லதா தனது கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல் பாவனை செய்து தொலைவிலிருக்கும் இலக்கை நோக்கி எய்கிறார். அதனைப் பதிவு செய்யும் கேமரா, அம்பின் திசை மற்றும் இலக்காக அருகில் இருக்கும் மசூதி ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதனையடுத்து, இந்த வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த மாதவி லதா, இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கூறியுள்ளார். இது குறித்து பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா தனது ட்விட்டர் (எக்ஸ்) தளபக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னுடைய வீடியோ ஒன்று ஊடகங்களில் பரவி எதிர்மறையை ஏற்படுத்துவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது முழுமையடையாத காணொளி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இதுபோன்ற காணொளியால் யாருடைய உணர்வும் புண்பட்டிருந்தால், எல்லா நபர்களையும் மதிப்பதால் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்