உலக அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கரோனா வைரஸ், இந்தியாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இந்த வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதன் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு மாநில அரசுகள் நிவாரணங்களை வழங்கி வருகின்றன.
இதற்கிடையில் கல்விக்கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தப்படுவதாக பெற்றோரிடமிருந்து பல மாநிலங்களில் இருந்து புகார்கள் எழுந்தன. சில தினங்களுக்கு முன்பு, 2020-21 ஆம் ஆண்டுக்கான கட்டணத்தை தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது. 2019-20 ஆம் கல்வியாண்டுக்கான கட்டணம் நிலுவையில் இருந்தாலும் அதைக் கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த நடவடிக்கையை தற்போது புதுச்சேரி அரசும் எடுத்துள்ளது. புதுச்சேரியில் மாணவர்கள், பெற்றோர்களிடம் கல்விக்கட்டணம் செலுத்துமாறு நிர்பந்திக்கக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.