இன்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர், "புதுச்சேரியில் கடந்த 15 நாட்களாகவே எந்தவித தொற்றும் இல்லாமல் உள்ளது. நேற்று ஒருவர் குணமடைந்து சென்றுவிட்டார். 5 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது 3,915 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால், ஏனாம், மாஹே பிராந்தியங்கள் தொற்று இல்லாத பகுதியாக உள்ளன. நேற்று 65 பேருக்கு தொற்று இருக்கின்றதா என்று சோதனை செய்ததில் 63 பேருக்கு தொற்று இல்லை என்று வந்துள்ளது. இனிமேல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் முழுவீச்சில் செயல்படும். கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதர நிலையங்கள் செயல்படும். உத்தரவை மதித்து திறக்காத மருத்துவமனைகள் உரிமம் ரத்து செய்யப்படும்.
துணி கடைகள் உட்பட மற்ற கடைகள் திறப்பதற்கு அனுமதி கிடையாது. அத்தியாவசிய கடைகள் தவிர எந்த கடையும் திறக்க கூடாது. அவ்வாறு திறந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். மஞ்சள் அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் 10 கிலோ அரிசி வழங்கப்படும். துணை நிலை ஆளுநர் வேண்டுமென்றே பல கட்டுப்பாடுகளை போட்டுள்ளார்.
வீடு வீடாக சென்று மருத்துவ பணியாளர்கள் மூலம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. இதுவரை 8 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் அவர்களை மருத்துவமனையில் சேர்க்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை இல்லை. வரும் மாதங்களில் கரோனா தொற்று அதிகரிக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் வரும் நாட்களில் புதுச்சேரி மக்கள் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும், முக கவசம் அணிய வேண்டும். அணியாமல் வந்தால் அபராதம் விதிக்க அறிவுறுத்தி உள்ளேன் என்றார்.