மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிராகக் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 16க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளனர். அந்த அணிக்கு ஐ.என்.டி.ஐ.ஏ(INDIA) எனப் பெயர் வைத்துள்ளனர். அதே போன்று ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு என்.டி.ஏ என பெயர் வைத்துள்ளனர். இதையடுத்து பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் நாட்டின் பெயரான இந்தியாவை எதிர்க்கட்சிகள் தங்களது கூட்டணிக்கு வைத்துள்ளனர் என்று கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் ஐ.என்.டி.ஐ.ஏ(INDIA) என்ற பெயரைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் எனக் கூறி டெல்லி உயர்நீதிமன்றத்தில் கிரிஷ் உப்பாத்யாயா என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் அரசியல் கட்சிகள் தங்களின் தேவைக்காக நாட்டின் இந்தியா என்ற பெயரை பயன்படுத்துவதால், அது நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் என்றும், அதுமட்டுமில்லாமல் உலக அரங்கில் இந்தியாவின் பார்வை மாறுபடும். இந்தியா என்ற பெயரை எதிர்க்கட்சிகள் பயன்படுத்தினால் பொதுமக்களின் மத்தியில் குழப்பம் ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன் ஐ.என்.டி.ஐ.ஏ(INDIA) கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.