கரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில் நான்காவது கட்டமாக மே 31 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதனிடையே ஊரடங்கில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் அரசு மதுபானக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் சில நாட்களாக புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்கள் கடலூர், விழுப்புரம், நாகை மாவட்ட எல்லையோர பகுதிகளிலுள் மதுக்கடைகளில் மதுபாட்டில்கள் வாங்கிச் செல்கின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் மதுக்கடைகள் திறப்பது தொடர்பான அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் நேற்று முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் மதுக்கடைகளைத் திறக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த அறிவிப்பால் புதுச்சேரி மதுப்பிரியர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் தற்போது துணை நிலை ஆளுநரின் ஒப்புதல் கிடைக்காததால் புதுச்சேரியில் இன்று மதுக்கடைகள் திறப்பு இல்லை என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் ஆளுநரிடம் ஒப்புதல் கிடைத்து, அரசாணை வெளியிடப்பட்ட பிறகு தான் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.