Skip to main content

மோசடியாக சேரமுயன்ற மாணவியின் தந்தையிடம் விளக்கம் கேட்டு ஜிப்மர் நோட்டீஸ்!  

Published on 10/09/2019 | Edited on 10/09/2019

சேர்க்கையில் மோசடியாக சேர முயன்ற தமிழக மாணவியின் தந்தையிடம் ஜிப்மர் நிர்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரி எம்.பி.பி.எஸ் படிப்பில் தமிழகத்தைச் சேர்ந்த கிருத்திகா என்ற மாணவி போலி சான்றுகள் மூலம் புதுச்சேரி இடஒதுக்கீட்டில் இந்தாண்டு சேர்க்கை பெற்றார்.  இந்த முறைகேடு தொடர்பாக பெற்றோர்- மாணவர் நலச்சங்கம் புகார் அளித்தது. கோரிமேடு காவல்நிலையத்திலும் சமூக அமைப்புகள் சார்பில் முறையிடப்பட்டது.   அதையடுத்து  54 மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. அதில் மாணவி கிருத்திகா தமிழ்நாடு, புதுச்சேரியில் முகவரி கொடுத்து மருத்துவ படிப்புகளுக்கான தேர்வில் பங்கேற்றது தெரியவந்தது. இதையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக புதுச்சேரி வருவாய்துறை செயலர் உத்தரவின்பேரில் விசாரணைகள் நடைபெற்றன. இந்நிலையில் 2 மாத காலத்துக்குபின் இவ்விவகாரம் தொடர்பாக முறைகேட்டில் சிக்கிய மாணவி கிருத்திகாவின் தந்தை குமாரிடம், ‘போலியாக முகவரி அளித்து தேர்வெழுதி ஜிப்மரில் இடஒதுக்கீடு பெற முயன்ற மாணவி மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற கேள்வியுடன், ஒரு வாரத்தில் விளக்கம் கேட்டு ஜிப்மர் நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளதாக தெரிகிறது.

 

puducherry jipmer


ஜிப்மர் நிர்வாகத்தின் இந்த தாமதமான நடவடிக்கையால் அந்த இடத்தில் மற்றொரு மாணவர் சேர முடியாத நிலையை சுட்டிக் காட்டியுள்ள தன்னார்வ அமைப்புகள் தங்களது கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர். இதுதொடர்பாக மாணவர், பெற்றோர் நலச்சங்கத் தலைவர் பாலா கூறுகையில், “ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் புதுச்சேரி மாணவர்களுக்காக 54 இடங்கள் ஒதுக்கபடுகிறது. நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் புதுச்சேரி மாணவர்களுக்கான இட  ஒதுக்கீட்டில் முறைகேடாக வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் இடம் பெற்றதாக ஜிப்மர் நிர்வாகம், வருவாய்த்துறை செயலர், கலெக்டர், கோரிமேடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் வெளிமாநில  மாணவர்கள்  சேர்த்துக்கொள்ள மறுக்கப்பட்டனர். இதனையும் மீறி 3 பேர் போலியாக  புதுச்சேரி இருப்பிடச்சான்றிதழ் பெற்று ஜிப்மரில் விண்ணப்பித்தனர். இது குறித்து எங்களுடைய சங்கத்தின் மூலம் புகார் அளித்தோம். இதற்கிடையே  ஜிப்மர் நிர்வாகம் போலி ஆவணங்கள் கொடுத்து எம்பிபிஎஸ் சேர்ந்த புகாரில்  புதுச்சேரி பொறியியல் கல்லூரி பேராசிரியர் குமாரிடம் விசாரணை நடத்தியது. அப்போது போலி ஆவணங்கள் கொடுத்ததற்காக உங்கள் மீது ஏன் கிரிமினல் நடவடிக்கை எடுக்கக்கூடாது என விளக்கம் கேட்டுள்ளனர். இதில் தொடர்புடைய எம்பிபிஎஸ் மாணவி கிருத்திகா தலைமறைவாகியுள்ளார். ஜிப்மர் மாணவர் சேர்க்கை கடந்த ஆகஸ்டு மாதம் 31ம் தேதியுடன் முடிவுற்றது.

 

puducherry jipmer


புதுச்சேரி ஒதுக்கீட்டில் போலி ஆவணங்கள் மூலம் வெளிமாநில மாணவி சேர்ந்துள்ளார். இந்த இடத்தில் வேறு மாணவரை தற்போது சேர்க்க முடியாது.  முறைகேடு அம்பலமானதால் அந்த இடம் காலியானது.  உடனே நடவடிக்கை எடுக்காததால், புதுச்சேரி மாணவருக்கான கல்வி உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் பேராசிரியர் குமார், அதற்கு துணைபோன வருவாய் அதிகாரிகள் தவறான சான்றிதழ் என தெரிந்தும் மாணவிக்கு இடம் கொடுத்த டீன் சாமிநாதன், புகாரை ஏற்க மறுத்த காவல்துறை என அனைவரும் குற்றவாளிகள்தான். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுவோம் என்றார்.

மாணவி கிருத்திகா மீதான புகார் அளித்து 2 மாதத்திற்குபின் நடவடிக்கை எடுக்கப்படுவது வேதனையளிக்கிறது. இதில் முதல்குற்றவாளி வருவாய்த்துறை. ஜிப்மர் நிர்வாகமும் தவறுக்கு துணைபோய் விட்டது. தற்போது இந்த முறைகேட்டின் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதன் மூலம் புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு மாணவரின் மருத்துவ படிப்பு கனவு தகர்க்கப்பட்டு உள்ளது. எனவே போலி சான்றிதழ் அளித்த அதிகாரி உள்ளிட்ட ஒவ்வொருவரின் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்