Skip to main content

"மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு சட்டங்களை நிறைவேற்ற கூடாது"- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி! 

Published on 20/09/2020 | Edited on 20/09/2020

 

puducherry cm narayanasamy press meet

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று (19/09/2020) புதுச்சேரி சட்டப்பேரவை கமிட்டி அறையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "புதுச்சேரியில் அதிக மருத்துவ பரிசோதனை செய்வதன் காரணமாக கரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இறப்பு விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்று மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரிக்கும், ஜிப்மருக்கும் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவது தொடர்பாக 21- ஆம் தேதி ஜிப்மர் நிர்வாகத்துடன் பேச உள்ளோம். 

 

தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள் தங்களிடம் காய்ச்சல், இருமல், வயிற்றுபோக்குடன் வருபவர்கள் குறித்த விவரங்களை உடனே சுகாதாரத்துறைக்கு தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களது உரிமம் ரத்து செய்யப்படும். அவர்கள் தகவல் தெரிவித்தால் அதன் அடிப்படையில் அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்ய முடியும்.

 

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் தொற்றின் தாக்கம் தெரியாமல் வெளியே உலவுகின்றனர். இதனால் தொற்று சமூக பரவலாக மாறி மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கண்டிப்பாக வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது, மீறினால் ரூபாய் 1000 அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

 

தற்போது மருத்துவத்துறையில் ஏற்படுகிற மாற்றங்களின் அடிப்படையில் மருத்துவமனை அதிகாரிகள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு கரோனா தொற்று சம்பந்தமாக பயிற்சி அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். கிராமப்புறங்களில் உள்ள மக்களை எக்ஸ்- ரே கருவி மற்றும் ஆக்ஸி மீட்டர் மூலம் பரிசோதித்து அவர்களை மருத்துவமனையில் அனுமதிப்பதா? அல்லது வீட்டிலேயே தனிமைப்படுத்துவதா? என்று முடிவு செய்ய வேண்டும். 

 

இதற்காக 15 துணை சுகாதார மையங்களில் எக்ஸ்- ரே கருவி மற்றும் ஆக்ஸி மீட்டர் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை தனியார் மருத்துவ கல்லூரிகளும் செய்ய வேண்டும். அதன்மூலம் தொற்று பாதிப்பு உள்ளவர்கள் வெளியே உலவுவதை தடுக்க முடியும். புதுச்சேரியில் உள்ள 2,463 சாதாரண படுகைகளில் 975 காலியாக உள்ளன. ஆக்ஸிஜன் படுக்கைகள் 958ல் 398 காலியாக உள்ளன. 132 வெண்டிலேட்டரில் 43 காலியாக உள்ளன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுகைகள் உள்ளன.

 

தனியார் மருத்துவமனைகளிடம் 200 சாதாரண படுக்கைகள், 100 ஆக்ஸிஜன் படுக்கைகளும் கேட்டோம். அதில் 90 சதவீதம் ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். அரசு மருத்துவ கல்லூரியில் அனைத்து படுக்கைகளையும் ஆக்ஸிஜன் படுக்கைகளாக மாற்றும் வேலை நடைபெற்று வருகிறது. அதேபோல், ஜிப்மரிலும் கூடுதலாக ஆக்ஸிஜன் மற்றும் வெண்டிலேட்டர் படுக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளோம்.

 

ஆளுநர், அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழுவினர் உள்ளிட்ட அனைவரின் கூட்டு முயற்சியால் ஓரளவு கரோனா தொற்று கட்டுப்படுத்த முடிகிறது. மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் தொற்றை கட்டுப்படுத்த முடியாது. எனவே, மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அடுத்த வாரம் உலக சுகாதார அமைப்பின் பொறுப்பாளர் டாக்டர் சவுமியா சுவாமிநாதனை அழைத்து ஆலோசனைகளைக் கேட்க உள்ளோம்.

 

தற்போது செலவு அதிகமாக உள்ளது. மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கு சுகாதாரத்துறையின் நிதி மற்றும் முதல்வரின் கோவிட் நிவாரண நிதியை செலவு செய்து வருகிறோம். கரோனா தொற்று பரவல் டிசம்பர் வரை இருக்கும் என்கின்றனர். இதனால் இன்னும் நிதி தேவைப்படுகிறது. தொழிற்சாலை அதிபர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும் முதல்வரின் கோவிட் நிவாரண நிதிக்கு தாராளமான நிதி வழங்க வேண்டும்.

 

புதுச்சேரியில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக இன்னும் முடிவு செய்யவில்லை. விவசாயிகளை பாதிக்கும் வகையிலான 3 மசோதாக்களை மக்களவையில் மத்திய பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது. இதனால் பாஜக கூட்டணியில் இருந்து சிரோமணி அகாலி தளத்தைச் சேர்ந்த உணவு பதனிடுதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த சட்டம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமானது. இதனை விவசாயிகள் முழுமையாக எதிர்த்து வருகின்றனர். 

 

மத்திய அரசு, மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் அவர்களது இஷ்டப்படி சட்டத்தை நிறைவேற்றினால், அதனால் விவசாயிகள்தான் பாதிக்கப்படுவார்கள். எனவே, மத்திய அரசு மாநிலங்களின் கருத்துகளை கேட்க வேண்டும். அதனை நாடாளுமன்றத்தில் நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 

புதுச்சேரியில் நீட் தேர்வை நடத்தக் கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், தற்போது நீட் தேர்வை நடத்தி இருக்கிறார்கள். நீட் தேர்வு வேண்டாம் என்று கூறுகின்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும். இத்தேர்வு வந்தபிறகு தமிழகத்தில் 21 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கு மத்திய பா.ஜ.க அரசு முழு பொறுப்பேற்க வேண்டும்.

 

தமிழகம், புதுச்சேரியில் மாணவர்களுக்கு மிகப்பெரிய அநீதியை மத்திய அரசு ஏற்படுத்தி வருகிறது. இதுசம்பந்தமாக மக்கள் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதுமட்டும் போதாது. மக்கள் கொதித்தெழ வேண்டும். மாணவர்கள் தைரியமாக இருக்க வேண்டும். தங்களது உயிரை மாய்த்து கொள்ளக் கூடாது. புதுச்சேரியில் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். எங்களுடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம் என பிரதமரை கேட்டுக் கொள்கிறேன்".இவ்வாறு புதுச்சேரி முதல்வர் தெரிவித்தார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; சுகாதாரத்துறை விசாரணை!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Youth sacrifice during treatment Health investigation

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 24 ஆம் தேதி (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்திருந்தார். அப்போது மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஹேமச்சந்திரன் உயிரிழந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் தீர்த்தலிங்கம் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.