இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று (11/04/2020) காலை 11.00 மணியளவில் கரோனா பாதிப்பு குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு மாநில முதலமைச்சர்களுடன் காணொளி காட்சியின் மூலமாக கலந்துரையாடினார். இதில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் காணொளி கலந்தாய்வில் கலந்து கொண்டு புதுச்சேரி நிலவரம் குறித்து கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, "மாநில முதலமைச்சர்கள் அனைவரும் பிரதமரிடம் மாநிலத்தின் வருவாய் குறைந்துள்ளது என்றும், விவசாயம், கட்டுமான தொழில், தொழிற்சாலைகள் பதிக்கப்பட்டுள்ளன எனவும், அதனால் மாநிலங்களுக்கு வருவாய் இல்லாததால் மத்திய அரசு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். நான்கு மாதத்திற்கு ஜிஎஸ்டி பணத்தை மாநிலத்திற்கு வழங்க கோரிக்கை வைத்துள்ளனர். புதுச்சேரி மாநிலத்திற்கு இடைக்கால நிவாரணமாக 300 கோடி கொடுக்க வலியுறுத்தி உள்ளோம். மேலும் மக்களுக்கு வழங்க 900 கோடி கேட்டுள்ளோம். பிரதமர் இதுவரை பதிலளிக்கவில்லை.
மேலும் கரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் ஏப்ரல் 30- ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். முக்கியமாக ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு மக்கள் செல்வதைத் தடுக்க வேண்டும். மத்திய அரசில் இருந்து சில விதிமுறைகள் அளிக்கப்படும் என பிரதமர் கூறியுள்ளார்.
ஏப்ரல் 14- ஆம் தேதிக்கு பின்பு புதுச்சேரியில் என்னென்ன நடவடிக்கைகள் எடுப்பது என்பது தொடர்பாக கலந்தாலோசிக்க அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. புதுச்சேரி மாநிலத்திற்கு அருகில் தமிழகம் இருப்பதால் நாம் தனியாக முடிவு எடுக்க முடியாது. தமிழக முடிவை பொறுத்தே புதுச்சேரியில் ஊரடங்கு தொடர்பாக முடிவு எடுக்கப்படும். புதுச்சேரியில் எந்த மத விழாக்களும் நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. (12/04/2020) அன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாட உள்ளதால் தேவாலயங்களில் பாதிரியார் உட்பட 3 பேர் திருப்பலி நிறைவேற்றிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநில மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்." இவ்வாறு புதுச்சேரி முதல்வர் பேசினார்.