மகராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் கடன் வழக்கப்பட்டதில் சுமார் 25,000 ரூபாய் வரை ஊழல் நடந்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகராஷ்டிரா கூட்டுறவு வங்கி சார்பில் வழங்கப்பட்ட கடன்களில் பெருமளவு முறைகேடு நடைபெற்றுள்ளதாக கடந்த மாதத்தில் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அமலாக்கத்துறை தற்போது வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் மற்றும் அவரது உறவினர் உட்பட 75 பேர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
மகராஷ்டிரா கூட்டுறவு வங்கி தேசியவாத காங்கிரஸ் பிரமுகர்கள் பலரால் நிர்வகிக்கப்பட்டு வருவதாகவும், மிகவும் மோசமான நிதிநிலை கொண்ட சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்களுக்கும், அவர்களின் தொடர்புடையவர்களுக்கும் வங்கி விதிமுறைகள் மற்றும் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி கடன்கள் வழங்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. கடன்களை பெற்ற பின்னர் பல சர்க்கரை ஆலைகள் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆலைகளை வாங்கியவர்களும் வங்கியின் நிர்வாக இயக்குனர்களுக்கு தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இது தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கில் சரத் பவார் பெயரும் சேர்க்கப்பட்டது. இந்த நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சரத் பவார் கூறுகையில், “சிறைக்கு செல்வதால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, சிறை அனுபவம் எனக்கு இதுவரை கிடைத்ததில்லை, என்னை சிறைக்கு அனுப்ப முயற்சிப்பவர்களை நான் வரவேற்கிறேன். ஊழல் நடைபெற்றதாக கூறப்படும் வங்கியில் எந்த வகையிலும் நான் தொடர்புடையவன் அல்ல” என தெரிவித்தார்.