புதுச்சேரியில் உள்ள நான்கு நிறுவனங்களில், வருமான வரி ஏய்ப்பு செய்ததாக வந்த தகவலையடுத்து, வருமான வரித்துறை அதிகாரி வீரமணி தலைமையில், நான்கு இடங்களில் 12 பேர் கொண்ட குழுவினர் பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, அண்ணா சாலையில் உள்ள ஃபோர்வெல் பேங்கர்ஸ் (Forewell Bankers) மற்றும் இளங்கோ நகர் பகுதியில் உள்ள ஃபைனான்சியர் வீடுகளில் கடந்த 6 மணி நேரமாக சோதனை நடைபெற்று வருகிறது.
வருமான வரித்துறையினரின் சோதனையில் இதுவரை 30 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரம் என்பதால் வேட்பாளர் செலவு மற்றும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. வருமான வரித்துறையினரின் சோதனையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே, தமிழகத்தில் தி.மு.க., ம.தி.மு.க., மக்கள் நீதி மய்யம், அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி, கணக்கில் வராத பணத்தைப் பறிமுதல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.