Skip to main content

பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் இத்தனை கோடீஸ்வரர்களா!

Published on 01/06/2019 | Edited on 01/06/2019

பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக கடந்த வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். அப்போது பிரதமர் தலைமையிலான அமைச்சரவையில் 25 கேபினட் அமைச்சர்கள், 24 இணையமைச்சர்கள் மற்றும் தனிப்பொறுப்புடன் கூடிய 9 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். குடியரசுத்தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் பிரதமருக்கும், மத்திய அமைச்சரவையில் இடம் பெறவுள்ள எம்பிக்களுக்கும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்புப் பிரமாணம் செய்து வைத்தார். மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்றவர்களுக்கு நேற்று பிற்பகல் இலாக்காக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் மத்திய நிதித்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமனும், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக ராஜ்நாத் சிங்கிற்கும், மத்திய உள்துறை அமைச்சராக அமித்ஷாவிற்கும் இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டனர்.

 

 

cabinet meeting

 

 


இந்நிலையில் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு மொத்தம் 56 அமைச்சர்களின் வேட்புமனுக்களை ஆராய்ந்து அது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் 22 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர 16 பேர் மீது கொலை முயற்சி, சமூக நல்லிணக்கத்துக்கு தீங்கு விளைவித்தல், தேர்தல் விதிமீறல் போன்ற குற்றச்சாட்டுகளும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சரவையில் 51 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.  குறிப்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலை துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ஆகியோருக்கு ரூ.40 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு அமைச்சருக்கு ரூ.14.72 கோடி சொத்து உள்ளது. மத்திய அமைச்சரவையில் பிரதமரையும் சேர்த்து மொத்தம் 58 பேர் இடம் பெற்றுள்ளனர். அதில் 51 மத்திய அமைச்சர்கள் கோடீஸ்வரர்களாக இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்