2022-2023 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் உரையுடன் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் இன்று (31/01/2022) காலை 11.00 மணிக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.
நாடாளுமன்ற மையமண்டபத்தில் நடைபெற்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றியதாவது, "இந்தியா தனது 75வது சுதந்திர தின ஆண்டை கொண்டாடி வருகிறது. நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த அத்தனை போர் வீரர்களுக்கும் வணக்கங்கள். நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவிக்கிறேன். வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. கரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசு சிறப்பாக செயல்பட்டன. மத்திய அரசு அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சியை வழங்கும் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
கரோனா தடுப்பூசி செலுத்துவதில் உலகின் முன்னோடி நாடாக இந்தியா திகழ்கிறது. கரோனா தடுப்பூசி நம் நாட்டிலேயே தயாரித்ததால் நிறைய உயிர்கள் காப்பாற்றப்பட்டன. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ வசதிகள் எளிதில் கிடைக்க கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தேவையான வளர்ச்சியை அளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கடந்த காலங்களைவிட தற்போது இந்தியாவில் சுகாதார கட்டமைப்பு பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது" எனத் தெரிவித்தார்.
நீட் விலக்கு மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க. எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டனர். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
இன்றைய நிகழ்வில் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுவது இது 5வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.