நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனக்கு ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நீதித்துறை மற்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை விமர்சித்து சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். அவரது இந்த கருத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருந்ததாகக்கூறி உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. இந்த விசாரணையின் முடிவில், பிரசாந்த் பூஷனை குற்றவாளி எனக் கடந்த 20 ஆம் தேதி அறிவித்த நீதிமன்றம், இது தொடர்பாக, அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியது.
அவர் மன்னிப்பு கேட்க மறுத்ததை அடுத்து, ஆகஸ்ட் 31 அன்று அவருக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்திருந்த பிரசாந்த் பூஷன், நீதிமன்றம் விதித்த அபராதத்தை செலுத்துவதாகவும், அதேநேரம் இந்த தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்யப்போவதாகவும் தெரிவித்தார். அதன்படி, இன்று இந்த தீர்ப்புக்கு எதிராக அவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.