மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்த நாள் விழா புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு முதலமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கி, இந்திராகாந்தியின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய நாராயணசாமி, “நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, நரசிம்மராவ், மன்மோகன் சிங் போன்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரதமர்கள் நாட்டுக்கு செய்த சாதனைகளை மறைத்து கடந்த 5 ஆண்டுகளில் தான் வளர்ச்சி என பா.ஜ.க பொய் பிரச்சாரம் செய்து வருவதால், நாட்டு மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தற்போது நாட்டின் பொருளாதார நிலை என்ன? மக்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள்? நாட்டில் வேலை வாய்ப்பு மற்றும் பணப்புழக்கம் இல்லை. தொழிற்சாலைகள் உற்பத்தி குறைவுக்கு மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கைதான் காரணம்.
புதுச்சேரி மாநிலத்தில் நாம் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார்கள். அமைச்சரவை அனுப்பும் கோப்புகளில் கையெழுத்திடாமல் கொச்சைப்படுத்தும் வகையில் கவர்னர் நடந்து கொள்கிறார். எவ்வித அதிகாரங்களும் இல்லாமல் அதிகாரிகளை வசைபாடுவது, மிரட்டுவது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார். மாநில மக்களையும், வளர்ச்சியையும் பற்றி கவலைப்படாமல் தர்பார் நடத்துகிறார். அமைச்சரவையை அவர் மதிப்பதே கிடையாது. விரைவில் இதற்கு நீதிமன்றம் மூலம் முற்றுப்புள்ளை வைக்கப்படும். புதுச்சேரி மக்களை எவ்வளவு துன்புறுத்த முடியுமோ அவ்வளவுக்கு துன்புறுத்தும் செயலில் கவர்னர் ஈடுபடுகிறார். ஹிட்லரின் தங்கை கிரண்பேடி. நாங்கள் யாருக்கும் அடிமை கிடையாது. மக்கள் எங்களை தேர்ந்தெடுத்துள்ளார்கள். மக்களுக்கு தான் நாங்கள் பதில் சொல்ல வேண்டும். கிரண்பேடிக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. உங்களுக்குள்ள அதிகாரத்துடன் நீங்கள் செயல்பட வேண்டும்” என்றார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.