உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசியில் உள்ள மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் ஆகியோருடன் காணொளி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று (21/05/2021) கலந்துரையாடினார்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது, "கரோனா தொற்றின் இரண்டாவது அலையில், கரோனா தடுப்பூசி வழங்கும் பாதுகாப்பை நாம் பார்த்தோம். தடுப்பூசி போட்டுக்கொண்டதால் கிடைத்த பாதுகாப்புத் திறனின் காரணமாக, நமது முன்களப் பணியாளர்கள் ஏராளமானோர் மக்களுக்குப் பாதுகாப்பாகச் சேவை செய்ய முடிந்தது. பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதிலும் நாடு முழுவதும் ஆக்சிஜனின் விநியோகத்தை அதிகரிப்பதிலும் நமது ஆயுதப்படைகள் பாராட்டத்தக்க பணிகளைச் செய்துள்ளன.
வாரணாசி இவ்வளவு குறுகிய காலத்தில் ஆக்சிஜன் மற்றும் ஐசியூ படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. பண்டிட் ராஜன் மிஸ்ரா கரோனா மருத்துவமனை இவ்வளவு சீக்கிரம் தொடங்கப்பட்ட விதம், இவை அனைத்தும் நல்ல உதாரணங்கள். டெலிமெடிசின் மூலம் பல இளம் மருத்துவர்கள் உதவுகிறார்கள். டெலிமெடிசின் ஏழை, ஒடுக்கப்பட்டவர்களுக்குச் சிறந்த சுகாதார வசதிகளை வழங்குவதற்காகச் செயல்பட்டு வருகிறது." இவ்வாறு பிரதமர் பேசினார்.