வருங்கால வைப்பு நிதி (இ.பி.எஃப்.) கணக்கில் ஆதார் எண்ணை இணைக்காத தொழிலாளர்களின் கணக்கில் இருந்து எந்தப் பரிவர்த்தணையும் செப்டம்பர் 1ஆம் தேதிக்குப் பிறகு நடத்த முடியாது என அறிவுறுத்தியுள்ளது வருங்கால வைப்பு நிதி நிறுவனம்.
ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை இ.பி.எஃப். அலுவலகத்தில் உறுப்பினர்களாக சம்மந்தப்பட்ட நிறுவனம் இணைத்துவிடும். அந்த தொழிலாளர்களுக்கு என தனி அக்கவுண்ட் உருவாகும். தொழிலாளர்களிடம் மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் பணம், இ.பி.எஃப். அக்கவுண்டில் வரவு வைக்கப்படும்.
இ.பி.எஃப். அக்கவுண்ட்டோடு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த காலங்களில் அறிவுறுத்தியிருந்தது வருங்கால வைப்பு நிதி நிறுவனம். ஆனால், பலரும் ஆதார் எண்ணை இணைக்காமல் அலட்சியமாக இருந்தனர்.
இந்த நிலையில், இ.பி.எஃப். அக்கவுண்டில் ஆதார் எண்ணை இணைக்க செப்டம்பர் 1 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தும் இ.பி.எஃப். அலுவலக அதிகாரிகள், “தங்களின் இ.பி.எஃப். அக்கவுண்டில் ஆதார் எண்ணை தொழிலாளர்கள் இணைக்க வேண்டும். அப்படி இணைக்காதவர்கள், தங்களின் கணக்கிலிருந்து செப்டம்பர் 1க்குப் பிறகு பணத்தை எந்தத் தேவைக்காகவும் எடுக்க முடியாது. அதேபோல, ஆதார் எண்ணை இணைக்காத அக்கவுண்ட்டில், சம்மந்தப்பட்ட தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் தொகையையும் அவரது அக்கவுண்டில் செலுத்த முடியாது” என்று அறிவுறுத்தியுள்ளனர்.