
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின் அங்கு தொடர்ந்து பல்வேறு குழப்பங்களும், போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று பிந்து, கனகதுர்கா என்ற இரு பெண்கள் சன்னிதானத்தினுள் நுழைந்ததையடுத்து, அதனை எதிர்த்து அந்த பகுதியில் கலவரம் ஏற்பட்டது. அதன் ஒரு பகுதியாக இன்றும் கேரளா முழுவதும் பல்வேறு பகுதிகளில் பல அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இது குறித்து செய்தியாளர்களிடம் முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், 'சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு. இந்த அரசியலமைப்பு பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. சபரிமலையை ஒரு கலவர களமாக மாற்ற சங் பரிவார் அமைப்புகள் முயல்கின்றன. மேலும் நேற்று நடந்த கலவரத்தில் 7 காவல்துறை வாகனங்கள், 79 அரசு பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.மேலும் 39 காவலர்கள் இப்போது வரை தாக்கப்பட்டுள்ளனர். தாக்கப்பட்ட நபர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். மேலும் பெண் பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர்' என கூறியுள்ளார்.