கரோனா ஆட்கொல்லி வைரஸானது உலகம் முழுவதும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், கேரளாவிலும் ஒரு மாணவி இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்.
சீனாவில் இருந்து கேரளா வந்த மாணவி ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் "இந்த அவசரநிலையைச் சமாளிக்க தொடர்ச்சியான நடவடிக்கைகளை நாங்கள் தொடங்கியுள்ளோம்" என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "கேரளத்தில் நோயாளி ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரைத் தற்போது தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் சீனாவின் வூஹான் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவியாவார். சூழலை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்.
மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா என்னிடம் பேசி தற்போதைய நிலைமை குறித்து எடுத்துரைத்தார். சூழலை நாங்கள் தொடர்ந்து உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது கட்டாயம் என்றாலும், அதற்காக அச்சப்படத் தேவை இல்லை. எத்தகைய அவசரச் சூழலையும் எதிர்கொள்ள நமது சுகாதாரக் கட்டமைப்பு தயாராக உள்ளது.
தற்போதைய அவசர நிலைமையைச் சமாளிக்க நாம் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். பாதிப்புக்கு உள்ளாகி இருக்க வாய்ப்புள்ளோரைக் கண்டறிதல்; பாதிக்கப்பட்டோரைத் தனிமைப்படுத்துதல்; தரமான சிகிச்சை மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்படுதல் ஆகிய விஷயங்கள் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவாமல் தடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது" என தெரிவித்துள்ளார்.