Skip to main content

உயர்நீதிமன்ற நீதிபதி மறைவு; முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!

Published on 07/05/2025 | Edited on 07/05/2025

 

High Court judge passes away CM MK Stalin condoles

சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் ஜே. சத்ய நாராயண பிரசாத் (வயது 56) இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவரை அவரது உறவினர்கள் உடனடியாக மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நீதிபதியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு பொதுமக்கள், வழக்கறிஞர்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற நீதிபதி காலமான செய்தி மக்கள் மத்தியிலும், நீதித்துறையினர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பதவியில் உள்ள நீதிபதி மரணமடைந்தால் அன்றைய தினம் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரிக்கப்படுவது இல்லை என்கிற மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோடை விடுமுறைக் கால நீதிமன்றத்தில் விசாரணைக்காக இன்று (07.05.2025) பட்டியலிடப்பட்டிருந்த வழக்குகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மறைந்த நீதிபதி சத்ய நாராயண பிரசாத் கடந்த 1969 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் தேதி தஞ்சாவூரில் பிறந்தார். அவரது தந்தை  ஆர். ஜெய்பிரசாத், மூத்த வழக்கறிஞரும், புகழ்பெற்ற சட்ட நிபுணரும் ஆவார். சத்ய நாராயண பிரசாத் குடும்பத்தின் 2ஆம் தலைமுறை நீதிபதி ஆவார். வேலூரில் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த அவர், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை வரலாறு படிப்பில் பட்டம் பெற்றார்.

அதன் பிறகு, டெல்லிக்குச் சென்று டெல்லி பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு படிப்பில் பட்டம் பெற்றார். அதன் பின்னர், டெல்லி பல்கலைக்கழக வளாக சட்ட மையத்தில் சட்டத்தில் இளங்கலை (எல்.எல்.பி) படிப்பை முடித்தார். அதனைத் தொடர்ந்து அவர் கடந்த 1997ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் தேதி (29.01.1997)  அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவுசெய்து கொண்டு நீதித்துறையில் காலடி எடுத்து வைத்தார். அதன் தொடர்ச்சியாகக் கடந்த 2021ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக அவர் பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நீதிபதி சத்ய நாராயண பிரசாத் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜே.  சத்ய நாராயண பிரசாத்தின் திடீர்  மறைவுச் செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றிய தனது தந்தையின் வழியில் சட்டத்துறையை தேர்வு செய்து, வழக்கறிஞராகி, அரசியல் சட்டம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பான வழக்குகளிலும் திறம்பட வாதிடும் திறமை படைத்தவர்.

High Court judge passes away CM MK Stalin condoles

வழக்கறிஞராக நீண்ட அனுபவத்துடன் 2021இல் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பொறுப்பேற்று சிறப்பாகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர், நீதித்துறையில் மேலும் தனது சிறந்த பங்களிப்பை. சாதனைகளைப் படைக்க வேண்டிய தருணத்தில் நிகழ்ந்து விட்ட அவரது எதிர்பாராத மறைவு நீதித்துறைக்கும் நீதி பரிபாலன முறைக்கும் பேரிழப்பாகும். தமிழ்நாடு அரசின் சார்பில் அவருக்குக் காவல்துறை அணிவகுப்புடன் கூடிய இறுதி மரியாதை செலுத்தப்படும். பணியில் இருக்கும் நீதிபதி ஒருவரை இழந்து வருந்தும் சக நீதிபதிகள்,  வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். அதோடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மறைந்த நீதிபதி சத்ய நாராயண பிரசாத்தின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் அவரது, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் உடன் இருந்தனர். 

 

High Court judge passes away CM MK Stalin condoles

மேலும் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயண பிரசாத் காலமானார் என்ற செய்தி கேட்டு துயருற்றேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நீதித்துறையைச் சார்ந்தோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்