
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள பயங்கரவாதிகளை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இன்று (07.05.2025) நள்ளிரவு 01.44 மணி அளவில் நள்ளிரவில் இந்திய முப்படைகள் கூட்டாக இணைந்து அதிரடி ஏவுகணை தாக்கிதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தானில் செயல்பட்டு 9 பயங்கரவாத முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியதில் 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். ஆண்களை மட்டுமே குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அதனால், பல பெண்கள் தங்கள் கண் முன்னே தங்களது கணவர்களை இழந்தனர். கணவரை இழந்த பெண்கள், நெற்றியில் வைக்கும் குங்குமத்தை குறிக்கவே ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. திருமணம் ஆன பெண்கள் நெற்றி வடுகில் வைக்கும் குங்குமம் ‘சிந்தூர்’ என அழைக்கப்படும்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பல்வேறு வெளிநாட்டுத் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகையில், “இது ஒரு அவமானம். கடந்த காலத்தின் ஒரு சிறிய பகுதியை அடிப்படையாகக் கொண்டு, ஏதோ நடக்கப் போகிறது என்பதை மக்கள் அறிந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இந்த பிரச்சனை விரைவாக முடிவடையும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
சீனா வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் கூறுகையில், “பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதல்கள் கவலை அளிக்கிறது. அணு ஆயுதம் ஏந்திய அண்டை நாடுகளுக்கு இடையேயான பெரிய அளவிலான மோதலுக்கு பதிலளிக்கும் விதமாக இரு நாடுகளும் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். நிலைமையை மேலும் சிக்கலாக்கும் நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும்” என்று கூறினார்.
இந்தியா தாக்குதலை நிறுத்தினால் எல்லையில் பதற்றத்தைக் குறைக்கத் தயார் எனப் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சரும், துணைப் பிரதமருமான கவஜா ஆசிப் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.