Skip to main content

சாலை விபத்து; கறிக்கோழிகளை தூக்கிச் சென்ற பொதுமக்கள்

Published on 27/12/2023 | Edited on 27/12/2023
People carrying chickens during a road accident

டெல்லி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருவதால், எங்கு பார்த்தாலும் ஒரே வெண்புகையாக காட்சியளிக்கிறது. வரும் 31 ஆம் தேதி வரை கடுமையான பனிமூட்டம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பனிமூட்டத்தின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டதோடு, சாலை விபத்துகள் அதிகம் நடந்து வருகிறது. அதன்படி உத்தரப் பிரதேச மாநிலத்தில் பனிமூட்டம் காரணமாக நடைபெற்ற சாலை விபத்தில் இன்று மட்டும் 6 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவிலிருந்து கறிக்கோழிகளை ஏற்றிக்கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்றுள்ளது. அப்போது பனிமூட்டத்தின் காரணமாக முன்னால் சென்ற வாகனம் மீது லாரி மோதியதில், சாலையின் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் லாரியில் இருந்த சில கறிக்கோழிகள் சாலையில் வீசியெறியப்பட்டன.

இதனைத் தொடர்ந்து விபத்துக்குள்ளான லாரியை பார்த்த பொதுமக்கள், கறிக்கோழிகளை தூக்கிச் சென்றனர். இன்னும் சிலர் வீட்டிலிருந்து சாக்கு மூட்டை, பைகளிலும் கறிக்கோழிகளை எடுத்துச் சென்றனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சார்ந்த செய்திகள்