கன்னட சினிமா உலகில் பவர்ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகர் புனித் ராஜ்குமாருக்கு (வயது 46) இன்று (29/10/2021) காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரை உடனடியாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவந்த நிலையில், உயிர் பிரிந்தது.
புனித் ராஜ்குமார் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கர்நாடகா மாநில முதலமைச்சர் பசவராஜ், முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, மத்திய அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும், புனித் ராஜ்குமாரின் மறைவையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடகா மாநிலம் முழுவதும் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நடிகர் புனித் ராஜ்குமார் கடந்து வந்த பாதை....
கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் மறைந்த ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார். 1975ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி அன்று சென்னையில் புனித் ராஜ்குமார் பிறந்தார். 1976 முதல் 1989 வரை கன்னட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துவந்தார். 'பெட்டாடா ஹுவு' படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை புனித் ராஜ்குமார் பெற்றுள்ளார். நடிகர், பாடகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர். பல படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், 29 படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு 'அப்பு' என்ற திரைப்படத்தின் மூலம் கன்னட திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். மறைந்த புனித் ராஜ்குமாருக்கு அஸ்வினி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். 'ஜேம்ஸ்', 'வித்வா' ஆகிய படங்களில் நடித்துவந்த நிலையில் புனித் ராஜ்குமார் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.