இஸ்லாமிய பெண்களின் நலன் காக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான முந்தைய ஆட்சிக்காலத்தில் "முத்தலாக் தடை மசோதா" மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் பாஜக கூட்டணிக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால் மசோதா நிறைவேற்ற முடியாமல், அந்த சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் உடன் அவசர சட்டத்தை அமல்படுத்தியது. இந்த சட்டத்தில் இஸ்லாமிய பெண்களின் கணவர்கள் "தலாக்" என மூன்று முறை கூறி விவாகரத்து செய்ய முற்பட்டால், முத்தலாக் தடை சட்டத்தின் படி கணவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கும் வகையில் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதே போல் சம்மந்தப்பட்ட பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் கணவர்கள் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என முத்தலாக் தடை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மத்தியில் மீண்டும் இரண்டாவது முறையாக பாஜக ஆட்சி அமைத்தது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பதவியேற்றார். 17-வது மக்களவையின் முதல் கூட்டம் 17 ஆம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் பதவி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. நேற்று நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அந்த உரையில் "முத்தலாக் தடை மசோதா" குறித்து பேசியிருந்தார்.
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இஸ்லாமிய பெண்களை பாதுகாக்கும் வகையில் "முத்தலாக் தடை மசோதா" இன்று மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு. ஏற்கனவே மத்திய அமைச்சரவை முத்தலாக் தடை மசோதாவிற்கு ஒப்புதலை அளித்த நிலையில் மசோதா இன்று தாக்கல் ஆகிறது. அதே போல் மக்களவையில் பாஜகவிற்கு தனிபெரும்பான்மை இருப்பதாலும், மாநிலங்களவையில் பிஜு ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் பாஜக முத்தலாக் தடை மசோதாவை நிறைவேற்ற அதிக வாய்ப்பு உள்ளது. முத்தலாக் தடை அவசர சட்டத்தின் நகலை வைத்து மசோதா தாக்கல் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்கிறார்.