தலைநகர் டெல்லியில் ரோகினி பிரசாந்த் விஹார் பகுதியில் சிஆர்பிஎஃப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று முன் தினம் (20-10-24) இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் அருகே பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் ஒன்று வெடித்தது. இந்த தாக்குதலில் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை. இருப்பினும், மர்ம பொருள் வெடித்த பகுதியின் அருகே உள்ள கடைகள், வாகனங்கள் சேதமடைந்தன. உடனடியாக இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த தேசிய புலனாய்வு முகமை, தேசிய பாதுகாப்பு படை, சிஆர்பிஎஃப் மற்றும் டெல்லி போலீசார் ஆகியோர் அங்கு விரைந்து சோதனையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள் ஈடுபட்ட அந்த சோதனையில் வெள்ளை நிற பவுடர் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.
இந்த நிலையில், காலிஸ்தானுக்கு ஆதரவாக இந்த தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டதாக ‘ஜஸ்டீஸ் லீக் இந்தியா’என்ற பெயரில் டெலிகிராம் சேனலில் இருந்து வீடியோ அடங்கிய வெடிப்பு சம்பவம் குறித்த செய்தி ஒன்று வேகமாக பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த செய்தியில், ‘இந்தியாவின் கோழைத்தனமான ஏஜென்சியும், அவர்களின் எஜமானர்களும் இழிந்த கூலிப்படைகளை அமர்த்தி எங்கள் உறுப்பினர்களைக் குரலை அடக்க நினைத்தால், அவர்கள் முட்டாள்களின் உலகில் வாழ்கிறார்கள். நாங்கள் எவ்வளவு நெருக்கமாக அவர்களை நெருங்கி இருக்கிறோம், எந்த நேரத்திலும் அவர்களை தாக்கும் திறன் கொண்டவர்கள் என்பதை அவர்களால் கற்பனை செய்து பார்க்க முடியாது. #காலிஸ்தான் ஜிந்தாபாத், #ஜெஎல்ஐ’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், டெல்லி வெடிப்பு பின்னணியில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த டெலிகிராம் சேனல் குறித்த உரிய விவரங்களை டெலிகிராம் நிறுவனத்திடம் கேட்டு டெல்லி போலீசார் கடிதம் எழுதியுள்ளனர். விரைவில், தீபாவளி பண்டிகை வரவுள்ளதால் டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காலிஸ்தான் பயங்கரவாதிகள் தங்களுக்கென்று ஒரு தனி நாடு வேண்டும் என்று பல வருடங்களாக வலியுறுத்தி வருகின்றனர். இதில் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் வாழும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் காலிஸ்தானுக்கான கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இதில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் தலைமையில் காலிஸ்தான் கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் இருந்த ‘நீதிக்கான சீக்கியர்’ குழுவை, பிரிவினை ஏற்படுத்துவதன் காரணமாக உபா (UAPA) சட்டத்தின் கீழ் 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு தடை செய்தது. பஞ்சாப்பை சேர்ந்த நிஜார், 1997ல் கனடாவில் இடம்பெயர்ந்து காலிஸ்தான் டைகர் போர்ஸ் தலைவராகவும், சிக்ஸ் பார் ஜஸ்டிஸ் அமைப்பின் கனடா பிரிவின் தலைவராகவும் இருந்துள்ளார். இந்த இரண்டு அமைப்புகளுமே, பிரிவினை தாக்குதலை ஏற்படுத்துவதன் காரணமாக இந்திய அரசால் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கம் ஆகும். இந்த நிலையில் தான், ஹர்தீப் சிங் கனடாவின் சுரே நகரின் குருத்துவாரா அருகில் உள்ள அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்களால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். நிஜ்ஜார் படுகொலைக்கு, இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா தொடர்ந்து குற்றச்சாட்டு வைக்க, அதற்கு இந்தியா மறுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.