
மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வாலுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் நாளுக்குநாள் அதிகரித்துவரும் சூழலில், சாமானியர்களைக் கடந்து பல துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் என அனைவரையும் தாக்கி வருகிறது. அந்தவகையில் மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வாலுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கரோனா புள்ளிவிவரங்களை வெளியிடுவது முதல், நாடு முழுவதிலுமான கரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்வது வரை பல முக்கியமான பணிகளை மேற்கொண்டு வந்தவர் லாவ் அகர்வால். இவருக்குப் பரிசோதனை செய்யப்பட்டதில், கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளார். மேலும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள அவர் அறிவுறுத்தியுள்ளார்.