இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று (29.11.2021) தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடரில், பணவீக்கம், பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, சீன ஆக்கிரமிப்பு மற்றும் ஜம்மு & காஷ்மீர் விவகாரங்கள் ஆகியவற்றை எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
மேலும், கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே விவசாயிகள் பிரச்சனையையும், குறைந்தபட்ச ஆதார விலை விவகாரத்தையும் எழுப்ப முடிவு செய்துள்ள காங்கிரஸ், அதேநாளில் லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் எழுப்ப முடிவெடுத்துள்ளது.
மேலும், இந்த விவகாரங்களில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தற்போது, நாடளுமன்ற வளாகத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.