நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் போது உத்தரப் பிரதேச மாநில எம்.எல்.ஏக்கள் 9 பேர், போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றனர். இதனால், அந்த தொகுதிகள் காலியாகின. இதனை தொடர்ந்து, சிசாமாவ் தொகுதியின் சமாஜ்வாதி எம்.எல்.ஏவான இர்ஃபான் சோலங்கி, கிரிமினல் வழக்கில் தண்டிக்கப்பட்டதால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 10 சட்டமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதில், மில்கிபூர் சட்டசபை தேர்தலுக்கு தொடர்புடைய வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக் அந்த தொகுதிக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.
இந்த சூழ்நிலையில், மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலோடு உத்தரப் பிரதேசத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது, அதன்படி, 9 தொகுதிகளுக்கு நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனால், கூட்டணி கட்சிகளுக்குள் தொகுதி பங்கீடு குறித்தான பேச்சுவார்த்தை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், சமாஜ்வாதி கட்சியோடு இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், இடைத்தேர்தலில் போட்டியிட 5 தொகுதிகளைக் கேட்டுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், இரண்டு தொகுதிகளை மட்டுமே காங்கிரஸுக்கு ஒதுக்க சமாஜ்வாதி முன்வந்தது. இதனால், கூட்டணி கட்சிக்குள் தொகுதி பங்கீடு குறித்தான பேச்சுவார்த்தையில் சமரசம் எட்டப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், உத்தரப் பிரதேச இடைத்தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. இது குறித்து உத்தரப் பிரதேச காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே கூறுகையில், “உத்தரபிரதேச இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை. ஆனால் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய எந்தவித நிபந்தனையும் இன்றி காங்கிரஸ் கட்சி ஆதரிக்கும். கட்சி நலன்களைக் காட்டிலும் அரசியலமைப்பைப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.