4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன.
அந்த வகையில், உலகக் கோப்பை கிரிக்கெட் 2023ன், 12வது லீக் ஆட்டம் இன்று குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இது வரை இரு அணிகளும் உலகக் கோப்பை போட்டியில் ஏழு முறை நேருக்கு நேர் மோதி விளையாடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டியை கருத்தில் கொண்டு ‘மேக் மை ட்ரிப்’ என்ற தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம், வெளிநாட்டு அல்லது வெளியூர் பயணம், ஹோட்டல், பேருந்து, ரயில் உள்ளிட்ட பல சேவைகளின் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் நிறுவனம் ஆகும்.
இந்நிலையில், மேக் மை ட்ரிப் வெளியிட்டுள்ள விளம்பரப் பதிவில், ‘பாகிஸ்தான் ரசிகர்களுக்கு ஒரு திறந்த அழைப்பு. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் போட்டியிடும் இந்த விளையாட்டில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் அல்லது 200 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றால் 50 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம். அதேபோல், 6 விக்கெட்டுகள் அல்லது 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றால் 30 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம். 3 விக்கெட்டுகள் அல்லது 50 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தால் 10 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம்’ என அந்த விளம்பர நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பான விளம்பரப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மேலும், இத்தகைய விளம்பரத்தை வெளியிட்ட இந்த நிறுவனத்திற்கு எதிராகப் பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.