இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்த பல்வேறு மாநில அரசுகள், பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 21 ஆம் தேதியிலிருந்து மத்திய அரசே மாநிலங்களுக்கு தடுப்பூசிகளை வழங்கி வருகிறது.
இதற்கிடையே அண்மையில் மத்தியப் பிரதேச அரசு, பாகிஸ்தானிலிருந்து வந்து தங்கள் மாநிலத்தில் வசித்து வரும் 5000 இந்து சிந்தி சமூக மக்களுக்குத் தடுப்பூசி செலுத்த முடிவெடுத்தது. அந்த சமூக மக்களின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் ஒடிசா அரசு, தங்கள் மாநிலத்தில் பணி புரியும் நேபாள நாட்டினருக்குத் தடுப்பூசி செலுத்த முடிவெடுத்துள்ளது.
ஒடிசா மாநிலத்தில் பணிபுரியும் நேபாள நாட்டினருக்கும் கரோனா தடுப்பூசி வழங்குவதை நீட்டிக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களையும், மாநகராட்சி ஆணையர்களையும் அம்மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார். கோவின் செயலில் பதிவு செய்யத் தேவையான அடையாள அட்டை இல்லையென்றாலும், அவர்களுக்கு தடுப்பூசி வழங்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.