தமிழகத்தில் உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் வகையில் தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்தாண்டு செப்டம்பரில் அறிவித்திருந்தார். அதன்படி தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தைப் போலவே ஒடிசாவிலும் உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் வகையில், உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், “உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் உடல் மீது மூவர்ணக் கொடி போர்த்தப்பட்டு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த அறிவிப்பின் மூலம் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் தைரியம் மற்றும் தியாகத்தை கௌரவிப்பதே மாநில அரசின் முக்கிய நோக்கம் என்றும் முதல்வர் நவின் பட்நாயக் தெரிவித்துள்ளார்.