ஹத்ராஸ் சம்பவதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிட்டது தொடர்பாக விளக்கம் கேட்டு திக்விஜய் சிங், நடிகை ஸ்வரா பாஸ்கர் உள்ளிட்டோருக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஹத்ராஸில் 19 வயது இளம்பெண்ணை நான்கு பேர் சேர்ந்த கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட பெண், இரண்டு வாரங்கள் உயிருக்கு போராடி டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா, நடிகை ஸ்வரா பாஸ்கர் ஆகியோர் தங்கள் ட்விட்டர் பதிவில் இறந்த பெண்ணின் அடையாளத்தை வெளியிட்டிருந்தனர்.
இந்திய குற்றவியல் சட்டம், பிரிவு 228 ஏ (2)ன் கீழ் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்கள் குறித்த அடையாளங்களை வெளியிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த சட்டத்தை மீறும் வகையில், இவர்கள் மூவரும் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை பொதுவெளியில் வெளியிட்டதாக விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், இதுகுறித்து மூவரும் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், உடனடியாக சமூகவலைத்தளத்தில் இவர்கள் அந்த பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக பதிவிட்ட பதிவுகளை நீக்க வேண்டும் எனவும் மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.