சில வாரங்களாக வேதியியல், இயற்பியல் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதனை ஒரு இந்தியர் உள்ளிட்ட மூவர் பெற்றுள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பலபேர் இதுவரை நோபல் பரிசு வாங்கி உள்ள நிலையில் அதே மாநிலத்தை சேர்ந்த அபிஜித் பானர்ஜி இம்முறை பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை வாங்கியுள்ளார். இதில் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் அவரது மனைவிக்கும் தற்போது நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் எல்லாம் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் அவரை பற்றிய சுவாரசிய தகவல் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.
அவர் மேற்கு வங்கத்தில் 1983ம் ஆண்டு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது, மாணவர்கள் கல்லூரியின் நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர். இதில் கலந்துகொண்ட அவர், துணை வேந்தர் இல்லத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர் கைது செய்யப்பட்டு தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவர் ஒரு சில நாட்களிலேயே விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு எதிரான வழக்குகளும் கைவிடப்பட்டுள்ளது. இவ்வாறு, திகார் சிறைக்கு சென்ற ஒருவர் நோபல் பரிசு பெறுபவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.