ராமானுஜரின் 1000வது பிறந்தநாளை முன்னிட்டு ஐதராபாத் சம்ஷாபாத் அருகே உள்ள ராம்நகர் பகுதியில், தங்கம், வெள்ளி, தாமிரம், வெண்கலம், துத்தநாகம் ஆகிய ஐந்து உலோகங்களைக் கொண்டு 216 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட ராமானுஜரின் பஞ்சலோக சிலையை பிரதமர் மோடி அண்மையில் திறந்து வைத்தார். இந்த ராமானுஜரின் சிலைக்கு சமத்துவத்தின் சிலை எனவும் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்த ராமானுஜரின் சிலையை அமைத்தது சீன நிறுவனம் என்பதை சுட்டிக்காட்டி மத்திய அரசை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சமத்துவத்தின் சிலை சீனாவில் உருவாக்கப்பட்டுள்ளது. ‘புதிய இந்தியா’ என்பது சீனா-நிர்பாரா ? என கேள்வி எழுப்பியுள்ளார்.
சமத்துவத்திற்கான சிலை திட்டத்திற்கான இணையதளத்தில், ஏரோசன் கார்ப்பரேஷன் என்ற சீனா நிறுவனத்திடம் சிலை அமைப்பதற்கான ஒப்பந்தம் கடந்த 2015ஆம் ஆண்டு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சிலை உருவாக்கத்தின் முக்கிய பணிகள் சீனாவில் நடைபெற்றதாகவும், ராமானுஜர் சிலை 1600 பாகங்களாக இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.